ஜி-20 மாநாடு இந்தியாவின் பலத்தை உலகிற்கு காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பு- பிரதமர் மோடி

சர்வதேச அளவில் வலுவான கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு. இந்தியா ஏற்றுள்ள பதவி முழு நாட்டிற்கும் சொந்தமானது. இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும் ஈர்ப்பும் நிலவுகிறது.

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு அவசியம். நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவத்தை வெளிப்படுத்த இந்த உச்சி மாநாடு உதவும். வழக்கமான பெரிய பெருநகரங்களுக்கு அப்பால் இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளை உலகிற்கு காட்சிபடுத்த முடியும். ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளின் போது ஏராளமான பார்வையாளர்கள் இந்தியாவுக்கு வருவார்கள்.
ஜி-20 கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றினார். கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதில கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன் ரெட்டி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் உரையாடி மகிழ்ந்தார்.

 

-mm