தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் மண்டபத்தில் சுமார் 150 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பதவியேற்றவுடன் விளையைாட்டுத் துறையில் 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
-mm