சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு காரணம்- அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்கள்

சீனாவின் அடுத்த குறி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் ஆகும். இந்தியாவின் இயற்கை வளம் கொளிக்கும் மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம்.

இம்மாநிலத்தில் உள்ள தவாங் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பூடான் எல்லையில் அமைந்துள்ளது.

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா இங்கு தங்கி சென்றுள்ளார். அங்கு பிரமாண்டமான புத்த மடாலயமும் உள்ளது. மேலும் தவாங் பகுதியில் 108 நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இவை அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையான சிறப்பு கொண்டவை ஆகும். இவை புனித நீர் வீழ்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதனை காணவும், இந்த நீர் வீழ்ச்சிகளில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் இங்கு செல்வது வழக்கம்.

தவாங்கில் இயற்றை வளங்கள் கொட்டி கிடப்பது ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் இங்கிருந்து ஒட்டு மொத்த திபெத்தையும் கண்காணிக்க முடியும். இது தவிர ராணுவ நடமாட்டம், எல்லையில் நடைபெறும் செயல்கள் உள்ளிட்டவற்றை தவாங்கில் இருந்து நோட்டமிடவும், அவற்றை கட்டுப்படுத்தவும், பதில் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

திபெத்தை ஏற்கனவே கண்காணித்து வரும் சீனா, அதனை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தவாங் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது. மேலும் தலாய்லாமா தவாங் பகுதியில் தங்கி சென்றதும் சீனாவுக்கு கவுரவ பிரச்சினையாக இருந்தது. எனவே தான் தபாங்கை தன் வசப்படுத்த சீனா முயற்சி மேற்கொண்டது.

இதற்காக கடந்த பல மாதங்களாக காய் நகர்த்தி வந்த சீனா, கடந்த 9-ந் தேதி தவாங் பகுதியில் யாங்ட்சி பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சீன ராணுவம் பின்வாங்கியது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

ஆனால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு தவாங் பகுதியில் இந்திய ராணுவம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. உலகில் ரஷியா, கனடாவுக்கு அடுத்த படியாக மிக பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடாக சீனா உள்ளது. ஆனால் அதன் மொத்த நிலப்பரப்பில் 43 சதவீதம் பிறநாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றியது என்பது தெரியவந்துள்ளது.

2-ம் உலக போருக்கு பின்னர் கடந்த 1947-ம் ஆண்டு உள் மங்கோலியாவை சீனா ராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றியது. இதற்கு அடுத்த படியாக 1949-ம் ஆண்டு உய்குர் முஸ்லீம்கள் அதிகம் வசித்த கிழக்கு துர்கிஸ்தான் பகுதியை ஆக்கிரமித்தது. இப்பகுதியை தான் ஜின்ஜியாங் என்று அழைத்து வருகிறது. தற்போது அங்கு சீனர்களை அதிக அளவில் குடியமர்த்தி தனது நாடாகவே மாற்றி விட்டது.

இதுபோல 1950-ம் ஆண்டு திபெத்தையும் சீனா ஆக்கிரமித்தது. மேலும் ஏற்கனவே நடந்த போரில் இங்கிலாந்திடம் இழந்த ஹாங்காங்கையும் சீனா மீட்டது. சீனாவின் அடுத்த குறி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் ஆகும். அதற்கான நடவடிக்கையை இந்தியா முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளது. மேலும் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சர்வதேச சுற்றுலா தலமாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

-mm