எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களின் பாதுகாப்புக்காக எலக்ட்ரிக் காலணியை உருவாக்கிய பள்ளி மாணவி

காலணிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் எதிராளி மீது பாய்ந்து நிலைகுலையச் செய்துவிடும். ஜிபிஎஸ் வசதி இருப்பதால், பெண்ணின் இருப்பிடம் குறித்து பெற்றோருக்கு தகவலை அனுப்பும்.

பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, கர்நாடகாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணியை உருவாக்கி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த மாணவி விஜயலட்சுமி, தனது கண்டுபிடிப்பு பற்றி கூறுகையில், ‘பெண்ணை யாராவது தாக்க முற்படும்போதோ, அல்லது பாலியல் சீண்டலுக்கு ஆளாகும்போதோ, அந்த பெண் இந்த காலணியால் எதிராளியை உதைக்கவேண்டும்.

அப்போது இந்த காலணிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் எதிராளி மீது பாய்ந்து நிலைகுலையச் செய்துவிடும். இதற்கு தேவையான மின்சாரம் பேட்டரிகளின் உதவியுடன் காலணி வழியாக செல்கிறது. இது குற்றவாளிகளை எதிர்த்துப் போராட பெண்களுக்கு உதவியாக இருக்கும். இந்த காலணியை அணிந்து கொண்டு நடக்கும்போது பேட்டரியில் சார்ஜ் ஏறும்’ என்றார். இது தவிர, ஜிபிஎஸ் வசதியும் இருக்கிறது.

இது அந்த பெண்ணின் இருப்பிடம் குறித்து பெற்றோருக்கு தகவலை அனுப்பும். இந்த பிரத்யேக காலணியை உருவாக்கும் முயற்சியை விஜயலட்சுமி 2018ல் தொடங்கியிருக்கிறார். இந்த கண்டுபிடிப்புக்காக பல பதக்கங்களை பெற்றுள்ளார். சமீபத்தில் கோவாவில் தனது இந்த கண்டுபிடிப்புக்காக சர்வதேச விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

-mm