ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்க ஆராய்ச்சி- மத்திய அரசு

நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி ஆர் கே சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதற்கு உரிய பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலம் பொது மக்களின் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் காற்றாலை எரிசக்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காற்றாலை மின்சக்தியை பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் டென்மார்க்குடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

கடலோரக் காற்றாலைத் திட்டத்திற்காக உயர்தர காற்று டர்பைன்கள்,.உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது, கடலோர கரைப்பகுதி காற்று சக்திக்கான முன்னறிவிப்புகள் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த உடன்படிக்கை வகை செய்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மத்திய எரிசக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

தேசிய வேதியல் ஆய்வகத்தின் மூலம் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஹைட்ரஜனின் வேதியல் ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதற்கு எரிசக்திக் கலன்களை உருவாக்கி அவற்றின் வழியாக வாகனங்களை இயக்க இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தும் நடைமுறை இந்தியாவில் வணிக ரீதியில் இன்னும் சோதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

-mm