மீண்டும் சுனாமி தாக்கினால் சென்னையில் 2 கி.மீ. தூரத்துக்கு கடல்நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி ஆழிப்பேரலை கடந்த 2004ம் ஆண்டு ஏற்படுத்திய பேரழிவை காலத்துக்கும் நம்மால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் திடீரென கடலுக்குள் ஏற்பட்ட சுனாமி கரையோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகள் அனைத்தையும் சுனாமி ஆழிப்பேரலை துவம்சம் செய்தது.

தமிழகத்தில் மட்டும் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி தாக்குதல் ஏற்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலோரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் நினைவு அஞ்சலியை செலுத்தினார்கள். ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் தற்போதும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் இதுபோல் எப்போதும் ஒரு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுதல்களாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சுனாமி எச்சரிக்கை சில நேரங்களில் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரிய அளவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்று பாதிப்பு எங்கேயும் ஏற்படவில்லை.
இதற்கிடையே மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் சென்னையையொட்டிய கடலோரப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவற்றின் ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் எந்தெந்த பகுதிகளில் மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கல்பாக்கம் பெரிய குப்பம் உள்ளிட்ட இடங்களில் 4 மீட்டர் வரையில் தண்ணீர் உட்புக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் ராயபுரம், கடற்கரை ரெயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும், நேப்பியர் பாலம், அடையாறு பாலம் ஆகியவற்றை சுற்றி உள்ள பகுதிகளிலும் கடல்நீர் உள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்று இந்திய கடலோரப் பகுதிகளில் சுமார் 7500 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பல்வேறு நிலப்பரப்புகளை அடிப்படையில் எச்சரிக்கை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் 3 கிலோ மீட்டர் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. அப்போது சென்னையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் விசாகப்பட்டினத்தில் ஒரு மீட்டர் தூரத்துக்கும் மட்டுமே தண்ணீர் புகுந்தது.

கடலை ஒட்டிய நிலப்பரப்பு சம தளமாக இருந்தால் கடல்நீர் உள் புகுவது அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கரையில் இருந்து சற்று உயரமான பகுதிகளில் கடல் நீர் புகுவது குறைவாகவே உள்ளது என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை பகுதியை பொருத்தவரையில் உத்தண்டி முதல் முட்டுக்காடு வரையிலும் பனையூர் பகுதியும் மீண்டும் சுனாமி ஏற்பட்டால் பாதிப்பை சந்திக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் ஊருக்குள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் மற்றும் சலவன் குப்பம் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல் நீர் ஊருக்குள் வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலின் இயற்பியல் அம்சங்களை ஆய்வு செய்து என்னென்ன பாதிப்புகள் எந்தெந்த பகுதியில் ஏற்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ளனர். கடலுக்கு அடியில் சில இடங்களில் சாய்வான பகுதிகள் இருந்தால் அங்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனாமி தாக்குதலை பொறுத்தவரையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அது ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

1881-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 2004-ம் ஆண்டு தான் மீண்டும் சுனாமி தாக்குதல் கடலோரப் பகுதிகளை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. எனவே மீண்டும் உடனடியாக ஒரு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற ஆறுதல் செய்தியையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே உடனடியாக சுனாமி வந்து விடுமோ என்று யாரும் பீதி அடைய தேவையில்லை.

 

-mm