18 உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலியான விவகாரம்- மருந்து உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை உறுதி

இருமல் மருந்து மாதிரிகள் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உத்தரவின்படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மேலும் மரியன் பயோடெக் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியானது தொடர்பாக உஸ்பெகிஸ்தான், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக முறையிடவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்திய தூதரகம், உஸ்பெகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டுள்ளதாகவும், விசாரணை தொடர்பான கூடுதல் விவரங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய மருந்து நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் மீது உஸ்பெகிஸ்தான் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த பிரதிநிதிகளுக்கு தூதரக உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

 

-mm