டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். சூரியகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என்றார் கபில்தேவ்.
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனாக வலம் வரும் அவருக்கு, இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சூர்யகுமார் யாதவின் இன்னிங்சை விவரிக்க சில சமயம் வார்த்தைகளே கிடைக்காது. சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் விளையாடுவதை பார்க்கும்போது, இவர்களை போன்ற ஒரு ஆட்டக்காரர் எப்போதாவது வருவார் என்று நாம் நினைப்போம். அந்த வரிசையில் இப்போது சூர்யகுமார் யாதவ் இணைந்து விட்டார் என்று நினைக்கிறேன்.
சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாடும் விதம் அற்புதம். குறிப்பாக ‘பைன் லெக்’ திசைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள் பந்து வீச்சாளர்களை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே ‘மிட் ஆன்’ மற்றும் ‘மிட் விக்கெட்’ திசையிலும் சிக்சர்கள் விரட்ட முடிகிறது.
பந்து வீச்சாளர்கள் சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து வீசினாலும் அதையும் தெறிக்க விடுகிறார். அதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம். எனது வாழ்நாளில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்த்து இருக்கிறேன்.
ஆனால் ஒரு சிலரே சூர்யகுமார் போன்று பந்தை துல்லியமாக நொறுக்குகிறார்கள். அவருக்கு பாராட்டுகள். அவரை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என தெரிவித்தார்.
-mm