சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசித்து வந்த பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். அப்போது குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசும் போது சம்பவம் நடந்து 15 நாட்களாகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும், எனவே தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப் படுவார்கள்.

காவல் துறையினர் உரிய வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மதம் மிருகம் என்றும், சாதி சாக்கடை என்றும் பெரியார் கூறி இருக்கிறார். சாதி, மதங்களை கடந்து அனைவரும் சகோதரத்துவத்தோடு பழக வேண்டும். ஆனால் சாதி, மதத்தை வைத்து பிரிவினையை தூண்டுபவர்களும் தற்போது உள்ளனர். இது போன்ற சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

-mm