இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது: மத்திய அரசு

இந்தியாவில் சட்டவிரோத கூட்டமைப்பு என கூறி சிமி இயக்கத்திற்கு உபா சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நாட்டின் சட்டங்களுக்கு முரண்பட்ட விசயங்களை சிமி அமைப்பு கொண்டுள்ளது.

அந்த அமைப்பு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இஸ்லாமை ஊக்குவிக்கும் வகையிலும், ஜிகாத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும் கோருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோதும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் ஒன்று கூடுதல், கூட்டம் போடுதல், சதிதிட்டம் தீட்டுதல், ஆயுதம், வெடிபொருட்களை பெறுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சிமி செயல்பாட்டாளர்கள், பிற நாடுகளில் உள்ள சிமி அமைப்பினரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது. சிமி அமைப்பு குறிப்பிட்டு உள்ள கருத்துக்கள் நமது நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது என்ற அவர்களது கருத்துருவை, எந்த சூழ்நிலையிலும், நீடித்திருக்க அனுமதிக்க முடியாது. நம்முடைய மதசார்பற்ற சமூகத்தில் அவர்கள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசு அதில் தெரிவித்து உள்ளது.

 

-dt