ஜோஷிமத் நகருக்கு நிவாரண பொருட்கள் எடுத்து சென்ற கேரள பாதிரியார் பலி- 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சக்கிட்டா பாறை பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஆபிரகாம் (வயது 37). பாதிரியாரான மெல்வின் ஆபிரகாம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அங்குள்ள ஜோஷிமத் நகர் மண்ணில் புதைந்து வருவதை அறிந்து அப்பகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் அங்கு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கி வந்தார்.

இதற்காக அடிக்கடி காரில் ஜோஷிமத் சென்று வந்தார். இதுபோல சம்பவத்தன்று கோட்வாரில் இருந்து ஜோஷிமத்துக்கு நிவாரண பொருட்களை எடுத்து கொண்டு தனியாக காரில் சென்றார். இதனை ஜோஷிமத்தில் முகாம்களில் தங்கி இருந்த மக்களுக்கும் தெரிவித்தார்.

நீண்ட நேரமாகியும் அவர் ஜோஷிமத் சென்றடையவில்லை. எனவே அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் பாதிரியார் மெல்வின் ஆபிரகாமை தேடிசென்றனர். அப்போது அவர் வந்த கார் ஜோஷிமத் செல்லும் சாலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை கண்டனர்.

காருக்குள் பாதிரியார் மெல்வின் ஆபிரகாம் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக பனிப்பொழிவு காரணமாக பாதிரியார் மெல்வின் ஆபிரகாம் சென்ற கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

-mm