ஒட்டுமொத்த இந்தியாவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவிகிதமாக உள்ள நிலையில் அசாமில் எச்சரிக்கை அளிக்கும் வகையில் 11.7 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். 18 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், சட்டப்படியாக திருமண வயதான 18 வயது அடைவதற்கு முன் நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனிடையே, 2019-20-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக நாட்டில் குழந்தை திருமணம் நடைபெறும் சராசரி 6.8 சதவிகிதமாக இருந்து வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் உச்சபட்சமாக எச்சரிக்கும் வகையில் 11.7 சதவிகிதம் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இது அசாமில் அதிக திருமணங்கள், அதிக குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த ஆய்வறிக்கையை மையமாக கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் அரசு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்தது.
அதன்படி, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவர். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அசாம் முதல்-மந்திரி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அசாமில் குழந்தை திருமணத்தை ஒழிக்க அசாம் அரசு அதிரடியாக களமிறங்கியது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2 ஆயிரத்து 258 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது. குழந்தை திருமணம் செய்து வைத்த மதபோதகர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
-dt