சில முக்கியமான பொருட்களுக்காக சீனாவை சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறைவாகவும், அங்கிருந்து இறக்குமதி செய்வது அதிகமாகவும் உள்ளது.
அதனால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் மீது கவனம் செலுத்துவதை விட சில முக்கிய பொருட்களுக்காக சீனாவை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். தீவிர மருந்தியல் உட்பொருட்களை அதிக அளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. பல்வேறு இந்திய நிறுவனங்கள், பல்வேறு மருந்துகள் தயாரிக்க அந்த உட்பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன.
அப்படி சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். வேறு வினியோக ஆதாரங்களை நாட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள், வர்த்தக சார்புநிலையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. சீன நிறுவனங்கள், சந்தைகளை எதிர்பார்க்கின்றன. இந்திய சந்தையை பிடிக்க விரும்புகின்றன. அவை ஏகபோக அதிகாரம் செய்வதை நாம் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-dt