இந்தியாவுக்கு வரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கும் காலத்தை மீண்டும் 182 நாட்களாக உயர்த்த வேண்டும்: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தல்

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் தங்கும் காலத்தை பழையபடி 182 நாட்களாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தேஷ்பாண்டே அறக்கட்டளை சார்பில், 14-வது மேம்பாட்டு பேச்சுவார்த்தை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதாவது:

கடந்த 2019 – 2020-ம் ஆண்டுவரை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), ஓராண்டில் இந்தியாவில் தங்கும் காலம் 182 நாட்களாக இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் என்ஆர்ஐ தங்கும் காலம் 120 நாட்களாக குறைக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை.

எனவே, பழையபடி என்ஆர்ஐ 182 நாட்கள் இந்தியாவில் தங்குவதற்கான நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்க வேண்டும். இந்த காலத்தை 250 நாட்களாக உயர்த்தினாலும் எந்த தவறும் இல்லை. என்ஆர்ஐ தங்கும் நாட்களை குறைத்ததால் இந்தியாவுக்கு எந்த கூடுதல் வருவாயும் கிடைக்காது. மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் என்ஆர்ஐ 3 கோடிக்கும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அவர்கள் இந்தியா வரும் போது அதிக நாட்கள் தங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்தியாவுக்கு அதிக பலன்கள்தான் கிடைக்கும். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட நமக்கு அதிக நேரம் கிடைக்கும். அத்துடன், என்ஆர்ஐ இங்கு அதிக நாட்கள் தங்குவது இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியல் தலைவர்கள், தூதரக அதிகாரிகளுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால், வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டுக்கு அதிக மதிப்பை ஏற்படுத்த கூடியவர்கள். அவர்கள் நம்மிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. இவ்வாறு நாராயண மூர்த்தி பேசினார்.

 

-th