ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல முயற்சி: தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 2 பேர் கைது

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட திட்டமிட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் (சிறப்பு பிரிவு) ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது:

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி கள் சமூக வலைதளங்கள் மூலம்இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதில் தூண்டப்பட்ட சிலர் மும்பை வழியாக டெல்லிவந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும், ஆயுத பயிற்சி பெற அவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டிபாகிஸ்தானுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்கு கடந்த 14-ம் தேதி ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து டெல்லி முழுவதும் சிறப்பு போலீஸ் படையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கோட்டைக்குப் பின்புறம் ரிங் ரோடு பகுதியில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமானவகையில் கைகளில் லக்கேஜ்களுடன் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் இருந்து 2 பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் அடங்கிய கார்ட்ரிஜ்கள், கத்தி, ஒயரை துண்டிக்கும் கருவி உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல்லா என்கிற அப்துர் ரஹ்மான், மற்றொருவர் 21 வயதுடைய காலித் முபாரக் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களை பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதி ஒருவர் சமூக வலைதளம் மூலமே வழிநடத்தி உள்ளார். டெல்லியில் இருந்து இந்திய எல்லையை சட்டவிரோதமாக கடந்து பாகிஸ் தானுக்குள் நுழைய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் ஆயுதங்கள் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழிநடத்தியது யார்?

ஏற்கெனவே இந்தியாவில் நடந்துள்ள தீவிரவாத செயல்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா, பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்தியது யார், எங்கு செல்ல இருந்தனர், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

இவ்வாறு துணை ஆணையர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

அவர்களை பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதி ஒருவர் சமூக வலைதளம் மூலமே வழிநடத்தி உள்ளார். இருவர் மீதும் ஆயுதங்கள் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

-th