ரஷியாவுடனான உறவு, இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி

டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் கிளெவர்லி

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது.

நாளையும் கூட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரிட்டன் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ஐ.நா.வின் சாசனம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்க நாங்கள் உதவி வருகிறோம். இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். நாடுகளுடனான இருதரப்பு உறவு என்பது தங்களுடைய விருப்பம் என்ற இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல், கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. கடந்த 8-ந்தேதி, ரஷிய ராணுவம், அதற்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக புதிய தடைகளை பிரிட்டன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

-mm