இந்திய-சீன உறவு ஆரோக்கியமாக இல்லை – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய – சீன உறவு ஆரோக்கியமாக இல்லை என்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்-கிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். கடந்த டிசம்பரில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். அதோடு, கடந்த 2020ம் ஆண்டு இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட சந்திப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கின் காங் சந்தித்தது 2020க்குப் பிறகு நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சராக கின் காங் பொறுப்பேற்ற பிறகு எங்களுக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பு இது. இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசினோம். அப்போது, இந்தியா – சீனா இடையே தற்போது நிலவும் உறவு ஆசாதாரணமாக இருக்கிறது என நான் தெரிவித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தியா – சீனா இடையே இருக்கும் உண்மையான பிரச்சினை, வெளிப்படையாகவும் நேர்மையாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.

ஜி20 தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம் என்றாலும், எங்கள் உரையாடலின் பெரும்பகுதி இருதரப்பு உறவு தொடர்பானதாகவே இருந்தது. குறிப்பாக, இருதரப்பு உறவில் உள்ள சவால்கள் குறித்தும், எல்லையில் அமைதி நிலவ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துமே நாங்கள் விவாதித்தோம்” என தெரிவித்தார்.

 

 

-th