தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிகிச்சை முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில், காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்குத் தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.

இது வழக்கமாக குளிர்காலம் மற்றும் பருவ மழைக்காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சலாகும். உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் இதன் அறிகுறிகள். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த முகாம்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக மக்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாகக்கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வைரஸ் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்துஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்புக் காய்ச்சல் வார்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது டெங்கு பாதிப்பு இல்லை” என்றார்.

நடமாடும் மருத்துவ குழுக்கள்

இந்நிலையில், மாவட்ட துணை சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக்கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். காய்ச்சல் பாதிப்பு விவரங்களை தொற்றுநோய் தடுப்புத் துறையின் ஐஹெச்ஐபி இணைய பக்கத்தில் பகிர வேண்டும்.

காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தோராயமாக ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை வகைப்படுத்த வேண்டும். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்துவிநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

-th