நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டார். நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என கூறியுள் ளார். எனவே அவரது கருத்துக்கு இந்த அவையில் உள்ள உறுப் பினர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருமாறு ராகுல் காந்தியை வலியுறுத்த வேண்டும்” என்றார்.
ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இதுபோன்ற ஒரு அறிக்கையை வாசித்தார். குறிப்பாக, “1975-ம் ஆண்டு (அவசர நிலை) மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது ஜனநாயகம் எங்கே இருந்தது? மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஒரு அவசர சட்ட நகலை (ராகுல்) கிழித்தபோது ஜனநாயகம் எங்கே இருந்தது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, அவையின் மையப்பகுதிக்கு சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், அதானி பங்குகள் முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விட வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுபோல மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, “மோடி தலைமையிலான அரசு அரசியல் சாசன சட்டப்படி செயல்படவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறது. அதானி பங்குகள்முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் மியூட் செய்யப்பட்டது” என்றார். இருதரப்பினரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல், நீதித் துறை, நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன.
ஜனநாயகத்தை மீட்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
-th