உலக அளவில் ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா – சுவீடன் ஆய்வு நிறுவனம் தகவல்

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2013-17 மற்றும் 2018-22-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவீதம் குறைந்திருந்த போதிலும், இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 14 சதவீதம் இறக்குமதியை அதிகரித்திருப்பதும், அதற்கு அதிகமான ஆயுதங்களை வழங்கும் நாடாக சீனா இருப்பதும் சிப்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் முதல் 5 இடங்களை முறையே அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-dt