இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது.
அவர்கள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கராச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவ குழு வினர் பயணியை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு ஐந்து மணி நேரம் தாமதமாக இறந்தவர் உடலுடன் விமானம் மீண்டும் டெல்லிக்கு வந்தது.
அப்துல்லாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது உடலை ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு இண்டிகோ நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.