மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்கா அங்கீகாரம்

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் செனட் உறுப்பினர்கள் பில் ஹேகர்டி, ஜெப் மெர்க்லி ஆகியோர் இருதரப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தோளோடு தோள் நிற்க வேண்டியது அமெரிக்காவின் கடமை ஆகும்.

இந்த இருதரப்பு தீர்மானம், இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரிக்கிறது. மெக்மோகன் கோடு அசல் எல்லை கோட்டு பகுதியை தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் சீனாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்க-இந்திய உறவு மேலும் வலுப்படுத்தப்படும்.

மேலும், மெக்மோகன் கோட்டை சீனாவுக்கும், அருணாசலபிரதேசத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கிறோம். தற்போதைய எல்லைப்பகுதி நிலவரத்தை மாற்ற படைபலத்தை பயன்படுத்துவது, கிராமங்களை உருவாக்குவது, அருணாசலபிரதேச கிராமங்களுக்கு மாண்டரின் மொழி பெயரை பயன்படுத்தி வரைபடம் வெளியிடுவது ஆகிய சீனாவின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம். சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

 

-dt