டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா அழைப்பு

டெல்லியில் ஏப்ரலில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, ரஷ்யா கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. இந்நிலையில் அமைப்பின் தலைவர் என்ற முறையில் இந்தியா பல்வேறு கூட்டங்களை நடத்துகிறது. இதில் வரும் ஏப்ரலில் டெல்லியில் நடைபெறும் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இதற்குமுன் எஸ்சிஓ தலைமை நீதிபதிகள் கூட்டத்தில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியாலுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். அவருக்கு பதிலாக நீதிபதி முனீப் அக்தர் காணொலி வாயிலாக பங்கேற்றார். டெல்லியில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை தொடர்ந்து, கோவாவில் வரும் மே மாதம் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் “இந்தியாவில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அல்லது பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பங்கேற்பார்களா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நேரடியாக பங்கேற்றால், 2011-க்கு பிறகு இத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அது இருக்கும்.

2011-ல் பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச் சர் ஹீனா ரப்பானி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஹீனா ரப்பானி தற்போது வெளியுறவு இணை அமைச்சராக உள்ளார். 2014-ல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லி வந்தார்.

 

 

 

-th