சாட் – ஜிபிடிக்கு போட்டியாக சீனா புதிய மென்பொருள் அறிமுகம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்பன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடி மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையப் பயன்பாட்டில் சாட்ஜிபிடி பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது.

தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை, சுற்றுலா, பொழுதுபோக்கு, விளம்பரம், நுகர்வோர் சேவை உள்ளிட்டவை சாட்ஜிபிடியால் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சாட்ஜிபிடியை எதிர்கொள்ளும் வகையில் புதிய தயாரிப்புகளை உருவாக்க கூகுள் உட்பட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவின் பைடு நிறுவனம் சாட்ஜிபிடிக்குப் போட்டியாக ‘எர்னி’ எனும் மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபின் லீ கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ‘எர்னி’மென்பொருளை உருவாக்கியுள்ளோம். இதன் முதல் வடிவம் 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மேம்பாடு செய்து தற்போது புதிய வடிவத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதுவரையில் 650 நிறுவனங்கள் எர்னியைப் பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.

 

 

-th