‘சிஸ்டர் சிட்டி’ மோசடி – 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தாவின் கைலாசா

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகரை ஏமாற்றியதற்காக நித்யானந்தா மற்றும் அவரது கற்பனை நாடான “கைலாசா” மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர்பக்கத்தில் வெளியிட வைரலாகின. பின்னர், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிக்கிறது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியது தெரியவந்த்து.

இந்நிலையில், இதேபோல் அமெரிக்காவின் 30 நகரங்களை ‘கைலாசா குடியரசு’ ஏமாற்றியது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரம் கைலாசா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்தி சீடர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் உள்ள சமூகங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே பல்வேறு கலாச்சாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக உருவாக்கபட்டுள்ள சிஸ்டர் சிட்டிஸ் என்ற அமைப்பின்படி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. நெவார்க் நகர மேயர் ரஸ் ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதிநிதி விஜய்ப்ரியா நித்தியானந்தா இருவரும் ஒப்பந்தம் செய்தனர். இதன் மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தி சீடர்கள் பெருமிதம் தெரிவித்துவந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

கைலாசா ஒரு உண்மையான நாடு அல்ல என்பதை கண்டுபிடித்தால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நெவார்க் நகர மேயர் தெரிவித்துள்ளார். கைலாசாவால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள மேயர் ரஸ் ஜெ.பராக்கா, நெவார்க் ஒரு மோசடிக்கு பலியாகிவிட்டது என்றும் தெரிவித்துளளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நகரம் நெவார்க் மட்டும் அல்ல. கைலாசா இணையதளத்தின்படி, அமெரிக்காவில் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

 

 

-th