மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பக்தர்கள் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிணற்றின் கான்கிரீட் சிலாப் மீது அதிக பக்தர்கள் ஏறியதால் பாரம் தாங்காமல் சிலாப் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சுமார் 30 பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர்.
தகவல் அறிந்து, மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஏணிகள் மற்றும் கயிறுகள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் மேற்பார்வையிட்டனர்.
பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கிணற்றில் இருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டன. 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 2 பேர் மருத்துவமனையில் பின்னர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த 13 பேரில் 11 பேர் பெண்கள் என கூறப்படுகிறது.
விபத்து குறித்து மத்திய பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். விபத்து குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். நிலைமையை அவ்வப்போது கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-th