மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கடற்படைக்கு தேவையான 17 கப்பல்கள் வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு ராணுவ தள வாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய இலக்குகளை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படைக்குத் தேவையான 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 நவீன ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத் தானது.
நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்களில் 7 கப்பல்கள் கோவாகப்பல் கட்டும் நிறுவனத்திட மிருந்தும், 4 கப்பல்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்தும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.9,781 கோடி ஆகும். இந்த கப்பல்கள் 2026-ம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
6 நவீன ஏவுகணை கப்பல் களை வாங்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ரூ.9,805 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் 2027 மார்ச்சில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த 17 கப்பல்களின் உருவாக்கத்துக்குத் தேவையான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் இதன் மூலம் இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்கள் மட்டுமல்லாது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-th