மேற்கு வங்கத்தில் ரம்ஜான் நோன்பு கால சலுகை – முஸ்லிம் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதி

கடந்த வாரம் துவங்கிய ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்படும் நோன்பினால் பலரும் சோர்ந்து விடுவது உண்டு. இதற்காக முஸ்லிம்கள் தங்கள் அன்றாடப் பணியிலிருந்து சற்று முன்னதாக மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை முதல்வர் மம்தா கடந்த மார்ச் 26-ல் ஏற்றார். மறுநாளே முஸ்லிம் அரசு ஊழியர்களுக்காக முதல்வர் மம்தா தனது உத்தரவில், “மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை வேலை நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கலாம்” என்று கூறியுள்ளார். இந்த உத்தரவு மாநில அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் 65 சதவீதம் பேர் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சாகர்திகி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இங்கு இடதுசாரிகளுடன் கூட்டணிஅமைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த சூழலில் இப்புதியசலுகையை மம்தா அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் சுமார் 30 சதவீதம் உள்ளனர். இந்நிலையில் முதல்வர் மம்தா இந்த வருடம் தனது கையொப்பம் இட்ட ரம்ஜான் வாழ்த்து அட்டைகளை மவுலானாக்கள் மூலம்விநியோகிக்கவும் மவுலானாக்களை கவுரவிக்கவும் திட்டமிட்டு ள்ளார். இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் ரம்ஜான் மாதத்தில் தினமும் தராவிஹ் எனும் சிறப்பு தொழுகை மசூதி மற்றும் தனியார் கட்டிடங்களில் நடைபெறும்.

அதுபோல் முராதாபாத் லஜ்பத் நகரில் ஜாகீர் உசேன் என்பவர் தனது சேமிப்புக் கிடங்கில் தராவிஹ் தொழுகையை சுமார்30 பேருடன் நடத்தினார். அதற்குராஷ்டிரிய பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சேமிப்புக் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 

 

-th