உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம்

புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில், ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 76 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகளவில் அரசியல் நகர்வுகள், தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், நிர்வாகத் திறன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் மார்னிங் கன்சல்ட் ஆய்வு நிறுவனம், உலக தலைவர்களின் செல்வாக்கு பற்றி கடந்த மார்ச் 22 முதல் 28 வரை கருத்து கணிப்பு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உலக அளவில் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும், மதிக்கப்படும், நம்பப்படும் தலைவராக பிரதமர் மோடி தொடர்ந்து நீடிக்கிறார்” என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆய்வின்படி, உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் 76% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் ஆப்ரடார் (61%) 2-ம் இடத்திலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (55%) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் வெறும் 19 சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (6-ம் இடம்) பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் (10), பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (11) உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்விலும் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

-th