இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் – இந்திய மாணவர் குற்றச்சாட்டு

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாக இந்திய மாணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ‘லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த கரண் கட்டாரியா (வயது 22) முதுகலை சட்டப் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு கரண் கட்டாரியா போட்டியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தான் ஒரு இந்தியர் என்பதாலும், இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கரண் கட்டாரியா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சாடினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடங்கியபோது, மாணவர் நலனுக்கான எனது ஆர்வத்தை மேலும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று நான் உண்மையிலேயே நம்பினேன். ஆனால் எனது இந்திய மற்றும் இந்து அடையாளத்தின் காரணமாக மட்டுமே எனக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் தொடங்கப்பட்டபோது எனது கனவுகள் சிதைந்தன.

இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க பிரசாரத்தை தொடங்கிய தவறு செய்தவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்குப் பதிலாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கியுள்ளது” என குற்றம் சாட்டினார்.

 

-dt