இந்தியாவில் 4000-ஐ கடந்தது தினசரி கோவிட் தொற்று

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 163 நாட்களுக்கு (கடந்தாண்டு செப்.25க்கு பின்னர்) பிறகு கோவிட் பாதிப்பு 4,000 கடந்திருக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 4,435 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 23,091ஆக உயர்ந்துள்ளது. அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (திங்கள்கிழமை) ஏற்பட்ட 3,038 பாதிப்பைவிட 46 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 79 ஆயிரத்து 712 ஆக உள்ளது.

கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா, கேரளாவில் தலா 4 பேர், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 916ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, கோவிட் பாதிப்புக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ” கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 214 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஒமைக்ரானின் திரிபான பிஎப்.7வகை வைரஸும் எக்ஸ்பிபி1.16வகை வைரஸும் கடைசியாக கண்டறியப்பட்டுள்ளன. இவைதான் இப்போதைய கரோனா பரவலுக்கு காரணமாக உள்ளன. எனினும், இவற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

அதேநேரம் கரோனா பரவலைசமாளிக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவு,மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்உள்ளிட்டவற்றை தயார் நிலையில்வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வாரந்தோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.

புதிதாக உருமாறிய வைரஸ்கண்டறியப்படும்போது அதைஆய்வகத்தில் தனிமைப்படுத்துகிறோம். பின்னர் அவற்றுக்கு எதிராக கரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என ஆய்வு செய்கிறோம். இதன்படி, இதுவரை கண்டறியப்பட்டுள்ள அனைத்து புது வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பதைப் பார்க்கிறோம். இதனால் கரோனா பரவலுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் அடுத்த 3 மாதங்களில் வெளியாகும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

-th