இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த ரேடார் தளத்தின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை, சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கிவருகிறது. இதனால் சமீபகாலமாக இலங்கையில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்துவருகிறது.இதற்கிடையே இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவுக்கு அருகில் உள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த ரேடார் தளம் உதவும் என அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் டீகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டு கடற்படை தளத்தையும் உளவு பார்க்க சீனாவுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.மேலும், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள இந்திய நிறுவனங்கள் ரேடாரின் வரம்புக்குள் இருக்கும் என விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்திய கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் மூலம் கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் ரேடார் வளையத்துக்குள் வரும் என்ற அச்சமும் உள்ளது.
இலங்கை ஆட்சியாளர்கள் அவ்வப்போது அணி சேராமை, நடுநிலைமை என தமது வெளிவிவகார கொள்கை குறித்து டம்பம் அடித்துவரும் நிலையில் தற்போது இலங்கையில் சீனா ரேடார் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது என இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-dt