உலக மகிழ்ச்சி குறியீடு பிழையானது, இந்தியாவின் தரவரிசை 126 அல்ல: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

உலகின் மகிழ்ச்சி குறியீடு பிழையானது. இந்தியாவின் தரவரிசை 126 அல்ல, 48 ஆக இருந்திருக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி துறையால் வெளியிடப்படும் அறிக்கையில் (எஸ்பிஐ எகோராப்) கூறப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்சியான நாடுகள் பட்டியலை கடந்த 10 ஆண்டுகளாக ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பு வெளியிட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான பட்டியலை உலக மகிழ்ச்சி தினத்தை (மார்ச் 20) முன்னிட்டு வெளியிட்டது. மொத்தம் 137 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் 92-வது இடத்தில் உள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடி நிறைந்த இலங்கையும் பாகிஸ்தானும் முறையே 112 மற்றும் 108-வது இடத்தில் உள்ளன.

இந்நிலையில் உலக மகிழ்ச்சி குறியீட்டில் இந்தியாவின் 126-வது தரவரிசையை எஸ்பிஐ எகோராப் முற்றிலும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ எகோராப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தப் பட்டியலில் சிறந்த தரவரிசை கொண்ட நாடுகளில் பள்ளிகள் முதல் தெருக்கள் வரை துப்பாக்கி தொடர்பான வன்முறை, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் தொடர்பான மக்கள் போராட்டம், தொடர் ராணுவ சர்வாதிகாரத்தால் சாமானிய மக்களுக்கு சுதந்திரம் அரிதாகியிருப்பது போன்ற பிரச்சினைகள் உள்ளன. இந்த தொடர் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 2023 மகிழ்ச்சிக் குறியீடு ஒரு புள்ளியியல் பிழையாகத் தெரிகிறது.

நிதி மகிழ்ச்சி, வேலை அணுகல் மற்றும் உற்பத்தி திறன் தொடர்பான மகிழ்ச்சி, மன மகிழ்ச்சி உள்ளிட்ட மகிழ்ச்சிக்கான அளவீடுகள் அடிப்படையில் நாங்கள் இந்தியாவை 48-வது இடத்தில் மதிப்பிடுகிறோம். 126-வது இடம் என்பதை முற்றிலும் நிராகரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியான ஐ.நா.வின் இந்த தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6-வது ஆண்டாக 7.8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

 

 

 

-th