தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர் மோடி என்று புகழ்ந்த அமெரிக்க அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது அவரிடம் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்தியாவை உலக வல்லரசாக முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும் என்பதில் அர்ப்பணிப்பும், விருப்பமும் கொண்டவராக விளங்கினார்.

மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க ஆழமான அக்கறை கொண்டிருந்தார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் குறித்தும் அவர் விரிவாக விளக்கி கூறினார்.

தற்போதைய தகவல் தொழில்நுட்ப சூழலில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து உலகை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். ஏஐ என்றால் அமெரிக்க – இந்திய தொழில்நுட்பம் என்கிற புதிய விளக்கத்தையும் பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டங்களின் அடிப்படையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்த வேண்டிய சிறந்த தருணம் இது. இவ்வாறு அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ கூறினார்.

 

 

-th