அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பேது அவர் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை தருவதற்கான போதுமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஒபெக் கச்சா எண்ணெய் குறைப்பு அறிவிப்பு, உக்ரைன்-ரஷ்யா போர் ஆகிய இரண்டு வெளிப்புற காரணிகளும் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஜி-7 விதித்துள்ள விலை உச்சவரம்புக்கு அருகே ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முடியும்.
ரிசர்வ் வங்கியைப் பொருத்த வரையில் பொருளாதாரத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த ரெப்போ ரேட் விகிதத்தை தற்காலிகமாக நிறுத்த ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு நியாயமானது. இதனை வணிக நிறுவனங்களின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
பருவமழையை பொருத்தே பொருட்களின் விலை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது தெரிய வரும். வரவிருக்கும் பொதுத் தேர்தல் பங்கு விற்பனைக்கு தடையாக இருக்கலாம். அதன்பிறகு ஏல நடவடிக்கைகள் தொடரும்.
அதானி விவகாரம்
நிறுவனங்களின் விவகாரங் களில் அரசு தலையிடுவதில்லை. அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு குழு விசாரிக்கும். நீதித் துறையின் கீழ் இந்த விவகாரம் உள்ளபோது அதுகுறித்து தற்போது கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது.
வேலைவாய்ப்பைப் பொருத்தவரையில் காலிப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. தனியார் துறையிலும் திறன்வாய்ந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
கிரிப்டோகரன்சி தொடர்பாக ஜி-20 உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அதற்கான ஒரு பரந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு திட்டமிடுவோம். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் தனது சொந்த கட்டமைப்புக்கு தக்கவாறு முடி வெடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-th