ஒமைக்ரானின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்த வகை கரோனா வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊடுருவும் தன்மைகொண்டது என்பதால் வரவிருக்கும் நான்கு வாரங்கள் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமான காலக்கட்டம் என உலகெங்கிலும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, நேற்று காலை நிலவரப்படி 9,111 பேர் எக்ஸ்பிபி 1.16 வகை கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60,313-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்கரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,31,141-ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியைத் தொட்டுள்ளது.
பிஏ2.10.1 மற்றும் பிஏ.2.75 ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திரிபாகவே எக்ஸ்பிபி1.16 அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹச்ஓ) தெரிவித்துள்ளது.
இந்த ஆர்க்டரஸ் வகை மிகவும் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்பதே டபிள்யூஹெச்ஓ-வின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், இந்த புதிய வகை கரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் பாதிப்பு விகிதம் என்பது மிக அதிகமாக உள்ளது.
தற்போது கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பீதியடையத் தேவையில்லை. ஆனால், வயதானவர்களும், கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் என்ன?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் இந்தவகை ஆர்க்டரஸ் வகை கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கண்கள் இளஞ் சிவப்பு நிறமாதல், தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். பெரியவர்கள் ஆர்க்டரஸ் பாதிப்புக்கு ஆளானால், தொண்டை புண், வாசனை இழப்பு, கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, இருமல், மூக்கிலிருந்து சளி வெளியேறுதல் உள்ளிட்டவை அறிகுறிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 9,111 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60,313 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
-th