மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியமக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது.
உலக மக்கள் தொகை எண்ணிக்கையை சீனா 1950-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வருகிறது. இதில் சீனா எப்போதும் முதல் இடத்தில் இருந்து வந்தது. தற்போது, அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி என்றும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என்றும் ஐ.நா கணக்கிட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பணியாளர்கள் வயதாகிவிட்டனர். அதை இளம் தலைமுறையினர் ஈடுசெய்யவில்லை.
செலவின அதிகரிப்பால் சீனாமக்கள் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதனால் பல பகுதிகளில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை சீனா அறிவித்தது. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு என்ற தரவு இந்தியாவிடம் இல்லை. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தொடங்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்று காரணமாக தாமதமானது.
ஐ.நா தரவுப்படி இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக உள்ளது. இதில் 25 சதவீதம் பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். 68 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள். 7 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இந்தியாவின் மக்கள் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கேரளா மற்றும் பஞ்சாப்பில் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இளம் வயதினர் அதிகம் உள்ளனர்.
இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் எனவும் 165 கோடியை எட்டியபின் குறையத் தொடங்கும் என பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
உலக மக்கள் தொகை நடப்பாண்டு மத்தியில், 804 கோடியாக இருக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மக்கள் தொகை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நா கூறியுள்ளது.
-th