தொழிலாளர் பணி நேரத்தில் மாற்றம் செய்யும் மசோதா – தொழிற்சங்கம் எதிர்ப்பு

தொழிலாளர் பணி நேரத்தில் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில்துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் ரவிசாம் கூறும்போது, ‘‘பணி நேரம் அதிகரிப்பு தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவையாக உள்ளது. தொழிலாளர் விருப்பத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது வார்ப்படம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சிக்கு உதவும்’’ என்றார்.

சீனா உள்ளிட்ட நாடுகளில்…: தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறும்போது, ‘‘தொழிலாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, தொழில் வளர்ச்சிக்கு உதவும். கட்டாயமாக்காமல், விருப்பத்தின் பேரில் இந்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது,’’ என்றார்.

‘ஹெச்எம்எஸ்’ தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜாமணி கூறும்போது, “இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு வாரத்தில், ஒரு தொழிலாளி 48 மணி நேரம், ஓவர் டைம் சேர்த்து 60 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், குறைந்தபட்ச ஊதியம் உட்பட பல்வேறு முடிவுகள் 1957-ல் நடத்தப்பட்ட முத்தரப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பல்துறை வல்லுர்களின் ஆலோசனைகளைப் பெற்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாபஸ் பெற வேண்டும்: மத்திய அரசு 2019, 2020-ம்ஆண்டுகளில் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதேபோன்ற தொழிலாளர் விரோத சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு அதிக ஆர்வமும், வேகமும்காட்டுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல் கூறும்போது, ‘‘பல ஆண்டுகளாக, பல கட்டப் போராட்டங்கள் நடத்தி தொழிலாளர்களுக்கு பெற்றுத் தந்த உரிமைகளைப் பறிப்பது ஏற்புடையதல்ல. தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உடனடியாக மசோதாவை வாபஸ் பெற வேண்டும்,’’ என்றார்.

 

 

-th