இந்திய வளர்ச்சியில் பங்கேற்க விருப்பம், அமெரிக்க தூதர் டொனால்ட் லூ கருத்து

இந்தியாவின் அற்புதமான அசுர பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவும் ஒரு அங்கமாக மாற ஆர்வத்துடன் இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவு செயலர் டொனால்ட் லூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இந்தியா எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அது இந்தியாவுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் கூட நல்லது. இந்தியாவின் அற்புத வளர்ச்சியில் அமெரிக்காவும் பங்குகொள்ள விரும்புகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் இந்தியா தற்போது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இன்னும் ஒரு தசாப்தத்தில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி வேகமாக நடைபோட்டு வருகிறது. வரும் 2047-க்குள் வளர்ந்த நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திசையை நோக்கிய இந்தியாவின் அற்புத பயணத்தில் அமெரிக்காவும் பங்கேற்பதில் மிக ஆர்வமாக உள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது.

இரு நாடுகளுக்கும் உள்ள உறவு வலுவடைந்து வருகிறது. அமெரிக்கா-இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் கூடுதலாக 7 சதவீதம் வளர்ச்சியடைந்த தரவுகளே இதற்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

விண்வெளி, செயற்கை நுண்ணறிவு முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை எதிர்கால தொழில்நுட்பங்களில் எங்களின் ஒத்துழைப்பை இந்தியாவுடன் மேலும் ஆழப்படுத்த விரும்புகிறோம்.

வலுவான மற்றும் வளமான இந்தியா அமெரிக்காவிற்கும் நல்லது. உங்களின் அதிசய பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் நாங்களும் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2019-ல் இந்தியாவுடனான அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம் 146.1 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2022-ல் 192 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

-th