சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 2 போர் விமானங்கள், சுமேதா கப்பல் விரைவு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படை யினருக்கும் – துணை ராணுவ (ஆர்எஸ்பி) தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த வாரம் மோதல் தொடங்கியது. இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ள தாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப் படையின் சி-130ஜே ரக விமானங்கள் 2 மற்றும் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 2 விமானங்களும் சவுதியின் ஜெட்டா நகரில் தயார் நிலையில் உள்ளன. சுமேதா கப்பல் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அங்குள்ள நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று கூறும்போது, ‘‘சூடான் தலைநகர் கார்தோமில் இருந்து 150 பேரை சவுதி கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்கள் ஜெட்டா வந்தடைந்துள்ளனர். அவர்களில் 91 பேர் சவுதியை சேர்ந்தவர்கள். மேலும் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த 66 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மீட்பு

சூடான் தலைநகர் கார்தோமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மீட்கப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தினார். அத்துடன், அங்குள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘சூடானில் மன சாட்சி இல்லாமல் நடைபெறும் சண்டையை உடனடியாக இரு தரப்பும் நிறுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.

 

 

-th