தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3டி தொழில்நுட்ப உதவியுடன் நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் (20), ஏசி மெக்கானிக் (29),தச்சு தொழிலாளி (45) ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் தலையில் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களது தலைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் மூளையில் அழுத்தம் அதிகமாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
மருத்துவமனை டீன்கே.நாராயணசாமி அறிவுறுத்தலின்படி, 3 பேருக்கும் 3டி தொழில்நுட்பத்திலான நரம்பியல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (நியூரோ பிளாஸ்டிக் சர்ஜரி) செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
முதல்கட்டமாக, உயிர் காக்கும் நடவடிக்கையாக, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் எம்.கோட்டீஸ்வரன் தலைமையில் கதிரியக்கவியல் துறை மருத்துவர் தேவி மீனாள், மயக்கவியல் துறை மருத்துவர் சந்திரசேகரன் கொண்ட குழுவினர், 3 பேரின் தலையிலும் ஒரு பக்க மண்டை ஓட்டை அகற்றி, ரத்தக் கசிவை சரிசெய்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அகற்றப்பட்ட மண்டை ஓட்டுக்கு பதிலாக செயற்கையான மண்டை ஓட்டை வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக, அவர்களது தலையை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி, அகற்றப்பட்ட மண்டைஓட்டால் எவ்வளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது துல்லியமாக கணக்கிடப்பட்டு, அதன்மூலம் டைட்டானியம் பொருள் மூலம் செயற்கையாக மண்டை ஓடு உருவாக்கப்பட்டு, 3 பேருக்கும் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு, 3 பேரும் நலமுடன் உள்ளனர்.
இதுதொடர்பாக டீன் நாராயணசாமி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் அதிக அளவிலும், தமிழகத்தில் சில தனியார் மருத்துவமனைகளிலும் 3டி தொழில்நுட்பத்திலான நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
3டி தொழில்நுட்பம் இல்லாமலும் இந்த சிகிச்சையை செய்யலாம். அப்படி செய்தால் முழுமையான வடிவம் வராது. சற்று மேடு, பள்ளம் இருக்கும். அறுவை சிகிச்சை செய்ததற்கான தழும்பும் தெரியும். ஆனால், இவர்கள் 3 பேருக்கும் தலையில் தழும்பு எதுவும் இல்லை. மேலும் ஒருவருக்கு இதேபோன்ற அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 3 பேருக்கும் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய தலா ரூ.5 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-th