பிரதமர் மோடி அலை கர்நாடக தேர்தலிலும் தொடரும்

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது…

மூத்த தலைவர்களுக்கே தொகுதிகள் கிடைக்கவில்லை. உங்களுக்கும் சோமண்ணாவுக்கும் மட்டும் 2 தொகுதிகள் எப்படி கிடைத்தது?

ஆச்சரியமாக இருந்தது. நானும் சோமண்ணாவும் பெங்களூருவை மையமாக வைத்து அரசியல் செய்தவர்கள். என்னை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கனகப்புராவிலும், சோமண்ணாவை முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வருணாவிலும் நிறுத்தி இருக்கிறார்கள். இது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான். இந்த முடிவின் பின்னணியில் வேறு கணக்குகள் நிச்சயம் இருக்கும்.

கனகப்புரா தொகுதியை டி.கே.சிவகுமாரின் கோட்டை என்பார்கள். அதில் அவரை வீழ்த்த முடியும் என நம்புகிறீர்களா?

கனகப்புரா தொகுதியில் டி.கே.சிவகுமார் தொடர்ந்து வென்றிருக்கலாம். அதற்காக அவரது கோட்டை என கூற முடியாது. பாஜகவை பொறுத்தவரை நான் ஒரு அடிப்படை சேவகன். என் தளபதி அமித் ஷா என்ன ஆணை இடுகிறாரோ, அதனை நிறைவேற்றுவது எனது கடமை. நானும் டி.கே.சிவகுமாரும் ஒக்கலிகா சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் நேருக்கு நேர் மோதுவதால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த தேர்தலில் ஒக்கலிகா வாக்கு வங்கியை மனதில் வைத்தே பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறதே?

ஆமாம். நாங்கள் ஒக்கலிகா வாக்கு வங்கியை குறிவைத்து காய்களை நகர்த்தி இருக்கிறோம். காங்கிரஸை காட்டிலும் பாஜக ஒக்கலிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. கெம்பே கவுடா சிலை, மைசூரு பெங்களூரு விரைவு சாலை ஆகியவற்றால் இந்த மண்டலத்தில் 3 முதல் 5 சதவீதம் வரை ஒக்கலிகா வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமன் சவதி உட்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் சீட் மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். இந்த பின்னடைவை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

காங்கிரஸ், மஜதவில் இருந்து வந்த சிலர் திரும்ப அங்கேயே போய் இருக்கின்றனர். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஆனால் பாஜகவின் கொள்கையை பின்பற்றி வளர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமன் சவதியும் காங்கிரஸில் இணைந்தது அப்பட்டமான சுயநலமாகும். இதற்கான தண்டனையை அவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.

ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமன் சவதி போன்றோரின் விலகலால் பாஜகவின் லிங்காயத்து வாக்கு வங்கி பாதிக்கப்படும் என கூறப்படுகிறதே?

லிங்காயத்து சாதியை பொறுத்தவரை எடியூரப்பாதான் பெரிய தலைவர். அவர் எங்களோடு இருக்கிறார். முதல்வர் பசவராஜ் பொம்மையும் லிங்காயத்து தலைவர் தான். அதனால் லிங்காயத்து வாக்கு வங்கி நிச்சயம் எங்களை விட்டு போகாது.

பாஜகவில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்சி மேலிடம் வேறு மாதிரி கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. வேட்பாளர் தேர்வு என்பது 3 விதமான சர்வேக்களின் அடிப்படையிலே நடைபெற்றது. தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, சாதி கணக்கு, இதர பலம் ஆகியவை ஆழமாக அலசப்பட்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பாஜக வெல்வதற்கு எத்தகைய வியூகங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்களோ, அதன்படியே கர்நாடகாவிலும் வேட்பாளர் தேர்வு நடந்திருக்கிறது.

பெரும்பான்மையான கருத்து கணிப்புகளைப் போலவே, காங்கிரஸாரும் அதிக இடங்களில் வெற்றிப்பெறுவோம் என கூறி வருகிறார்களே? தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெல்ல முடியாது என சொன்னார்கள். ஆனால் நாங்கள் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள 3 மாநிலங்களையும் வென்றிருக்கிறோம். அதேபோல கர்நாடகாவிலும் வெற்றிப்பெறுவோம். இங்கேயும் மோடி அலை தொடரும். காங்கிரஸ் ஒரு போதும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இரட்டை என்ஜின் அரசால் கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களின் ஊழல் புகாரை மக்கள் நம்பவில்லை.

இந்த தேர்தலில் பாஜகவுக்கும் மஜதவுக்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக‌ காங்கிரஸார் கூறுகிறார்கள். நீங்கள் முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்தது போன்ற புகைப்படம் கூட வெளியானதே?

எங்களுக்கு யாருடனும் கூட்டணி இல்லை. மக்களை குழப்புவதற்காக பொய்களை காங்கிரஸார் பரப்பிவிடுகின்றனர். பழைய புகைப்படங்களை எல்லாம் தோண்டி எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

 

-th