காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக,எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகவில் 58,112 வாக்குச்சாவடிகளில் கட்சி பணியை செய்ய இருக்கும் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது;
கர்நாடகா மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள், அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தைப் பெற்றதாகக் கூறினர்.
கர்நாடகாவில் விரைவில் பிரசாரம் செய்ய வருகிறேன். கர்நாடகாவில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெறும். கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். கர்நாடகாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
நான் ஒரு காரியகர்த்தாவாக கர்நாடகாவுக்குச் சென்றபோது, மக்கள் என் மீது அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பங்களித்த பலர் உள்ளனர். மன் கி பாத்தில் கர்நாடக மக்களின் பங்களிப்பைப் பற்றி நான் நிறைய பேசியிருக்கிறேன். காங்கிரஸ் என்றாலே ஊழல் , பொய் வாக்குறுதி என்றுதான் அர்த்தம் என்றார்.
-dt