மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் – சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி) போலீஸார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அரண்பூர் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ஐஇடி வகை கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 10 போலீஸார், வாடகை வேனின் ஓட்டுநர் உயிரிழந்தனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 10 போலீஸாரும் மாவட்ட ஆயுத போலீஸ் படையை சேர்ந்தவர்கள். இது, தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட் களின் செயல்பாடுகளை முடக்குவதற்கும், அவர்களை ஒடுக்குவதற்கும் மாநில காவல் துறையால் உருவாக்கப்பட்ட சிறப்பு படை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸாரின் வேன் சென்ற சாலையில், சுமார் 50 கிலோ வெடிபொருட்களை புதைத்து வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்ணிவெடியில் சிக்கிய போலீஸ் வேன், சுமார்20 மீட்டர் உயரத்துக்கு தூக்கி எறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் 10 அடிஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு சக்திவாய்ந்த (ஐஇடி) கண்ணிவெடியை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியபோது, ‘‘போலீஸார் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் வேரூன்ற விடமாட்டோம். மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கட்டாயம் ஒழிப்போம்’’ என்றார்.

அமித் ஷா ஆலோசனை: முதல்வர் பூபேஷ் பாகெலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு, விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, மாவோயிஸ்ட்களை ஒடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி கண்டனம்: போலீஸார் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும். கடினமான இந்த சூழலில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ராணுவ மேஜர் ஜெனரலும், முன்னாள் எல்லையோர ராணுவப் பிரிவு தலைவருமான அஸ்வினி சிவாச் கூறும்போது, ‘‘பொதுவாகவே சாலையில் புதைத்து வைத்து வெடிக்கச் செய்யும்போது, அதிக அளவுவெடிபொருட்களை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்துவார்கள். இதனால், தாக்குதலுக்கு உள்ளாகும் வாகனத்தில் இருப்பவர்கள் உயிர் தப்பவேமுடியாது. அதிக சக்தி வாய்ந்தவெடிபொருட்களை இச்சம்பவத்தில் மாவோயிஸ்ட்கள் பயன்படுத்தியுள்ளனர்’’ என்றார்.

போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியபோது, ‘‘தந்தேவாடா மாவட்டத்தில் அதிக அளவு மாவோயிஸ்ட்கள் மறைந்திருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி)உருவாக்கப்பட்டது. இப்படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இப்பகுதியில் இனிமேல் தேடுதல் வேட்டைநடக்க கூடாது என காவல் துறையை எச்சரிக்கும் நோக்கிலேயே மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்’’ என்றார்.

பஸ்டார் மாவட்ட ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறும்போது, மாவோயிஸ்ட்களை திருத்தி நல்வழிக்கு கொண்டுவரும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுமட்டும் 400 மாவோயிஸ்ட்கள் தங்கள்ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். தற்போது மாவோயிஸ்ட் தலைவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வெளியேறி தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பதுங்கி இருந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

 

-th