கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா – சீனா இடையே சுமுக உறவு ஏற்படாது

இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது அவர்கள் இருவரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். அப்போது அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

எல்லையில் அமைதி மற்றும் சமாதானம் நிலவினால் மட்டுமே இந்தியா-சீனா உறவை மேம்படுத்த முடியும். ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிபாடுகளின்படி சீன எல்லையில் அனைத்து பிரச்சி னைகளும் தீர்க்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறியதுதான் இந்தியா-சீனா உறவு சீரழிவுக்கு காரணம். எனவே, எல்லையில் சீன ராணுவம் குவித்துள்ள படையினரை திரும்ப பெற வேண்டும். தவுலத் பெக் ஒல்டியின் தெப்சங் சமவெளிப் பகுதி, டெம்சோக், நிங்லங் நுலாவில் உள்ள சர்திங் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் இருதரப்பு சுமுக உறவுக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ராஜ்நாத் சிங் தீவிரவாதத்தின் ஆபத்து குறித்தும் அதை தடுக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா,ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான்,தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

 

 

-th