தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக-வைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி என்பவர், தனது தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க பெரட்டா ரொட்டிக் கடை வைத்து, அவரே பெரட்டா ரொட்டி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், தாசநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த 56 வயதான வேலுசாமி உள்ளார். கடந்த, 2006-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, 2011 உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார். உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு, உறவினர்கள், நண்பர்களிடம் கணிசமான தொகை கடனாக பெற்றார்.
தேர்தல் முடிந்துவிட்டதால், கடன் கொடுத்தவர்கள் அசல் மற்றும் வட்டித்தொகைக் கேட்டு வருவதால் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மனைவி லட்சுமியிடம், டீக்கடை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பெரட்டா ரொட்டி கடையை வேலுசாமி திறந்துள்ளார்.
நாள்தோதோறும், காலை 6 மணி முதல், 10 மணி வரை, மைதா மாவு பிசைந்து பெரட்டா ரொட்டி சுட்டு வருகிறார். காலை நேரத்தில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை கூற வரும் பொதுமக்களிடம் பேசியபடியே, பெரட்டா ரொட்டி தட்டும் பணியில் வேலுசாமி ஈடுபட்டு வருகிறார்.
பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, கௌரவம் பார்க்காமல், அடுப்படியில் நின்று ரொட்டி சுடுவதை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுபற்றி வேலுசாமி கூறியதாவது: “பஞ்சாயத்து தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு இலட்சம் இந்தியா ரூபாய்க்கு (12,000 வெள்ளி) அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தைக் கூட மீட்க முடியவில்லை.
டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், பெரட்டா ரொட்டிக் கடை வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, பெரட்டா, மதியம் சாப்பாடு தயார் செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 இந்திய ரூபாய் (30 வெள்ளி) கிடைக்கிறது. அதன் மூலம் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.