கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, மத்திய, மாநில அமைச்சர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் பிரதமர் நரேந்திர‌ மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே பலகட்ட பிரச்சாரங்களை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பெங்களூருவில் 26 கி.மீ.தூரம் சாலை பேரணி மேற்கொண்டார்.

2-வது நாளாக பேரணி

இரண்டாவது நாளாக நேற்றும் பெங்களூருவில் உள்ள திப்பசந்திராவில் இருந்து காலை 10 மணிக்கு பேரணியை பிரதமர் மோடி தொடங்கினார்.

திறந்த வாகனத்தில் நின்றவாறு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இதனால் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடி மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

10 கி.மீ. தூரத்தை சுமார் 2 மணி நேரத்தில் கடந்த மோடி, 10 தொகுதிகளை சேர்ந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் ஷிமோகா சென்ற பிரதமர் மோடி, மலநாடு கர்நாடக பகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மாலை 5 மணிக்கு நஞ்சன்கூடு சென்ற அவர், பழையமைசூரு மண்டல வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தொட்டபல்லாபூரிலும், முதல்வர் பசவராஜ் பொம்மை கொப்பலிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிகாரிப்புராவிலும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரஸார் பிரச்சாரம்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குல்பர்காவில் பேரணி மேற்கொண்டார். பின்னர் சித்தாப்பூரில் போட்டியிடும் தன் மகன் பிரியங்க் கார்கேவுக்காக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் போட்டியிடும் வருணா தொகுதியிலும், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ராம்நகரிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் சிவராஜ்குமார், துனியா விஜய், நடிகைரம்யா உள்ளிட்டோர் மைசூரு, ஹூப்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.

பிரியங்கா முழக்கம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரா, மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில் சாலை பேரணி மேற்கொண்டார்.

அப்போது, ‘‘40 சதவீத ஊழல் அரசிடம் இருந்து விடுதலை வேண்டும்’ என முழக்கம் எழுப்பினார். இதையடுத்து மாலையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று காலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்த அவர், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகள், பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

ஸ்கூட்டரில் பயணித்த ராகுல்

பின்னர் ஊழியர்களுடன் சேர்ந்து மசாலா தோசை சாப்பிட்ட ராகுல், டெலிவரி ஊழியர் ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணித்தார். பிற்பகலில் ஆனேக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மாலையில் அம்பேத்கர் சாலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் காந்திநகர் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவை ஆதரித்து, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தலைவர்கள் இன்றும் பிரச்சாரம்

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கர்நாடகாவிலேயே முகாமிட்டு இன்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் மே 13-ல் வெளியாகும்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 10) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலையில் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல பிரச்சாரம் முடிந்த பின்னர் கருத்துக் கணிப்புகள் நடத்தி முடிவுகள் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. அன்று பிற்பகல் முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும். மாலையில் முடிவுகள் வெளியாகும்.

 

 

-th