மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று நினைக்கிறேன். தற்போதுள்ள தலைவர்கள் பலரை நான் அறிவேன். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பும் அல்லது வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்தியாவிற்கு ஆளும் கட்சியுடன் நட்பு பாராட்டாத ஒரு எதிர்க்கட்சி தேவை.
மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் தைரியமான பெண்மணி. அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்து போராடினார் என்பதை பார்க்க வேண்டும்.
நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் யாருக்கும் தெரியாது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன். அவரை பிளாக்மெயில் செய்வது என்பது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் பேசினார். இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுவாமி, ‘ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்.
அப்படி மாயாவதியையும் நினைத்து பார்த்தேன். தற்போதைய சூழ்நிலையில், மம்தா பானர்ஜி அப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார். தலைநிமிர்ந்து நிற்கும் துணிவு கொண்ட ஒரே பெண் தலைவர் அவர்தான்’ என்றார்.
-mm