நாட்டில் முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்போது முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்படும் பரிசோதனை நொய்டாவில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜிம்ஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரி (எல்எச்எம்சி) ஆகியவற்றிலிருந்து ஐ-ட்ரோன் மூலம் 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை நொய்டாவில் உள்ள ஜேபி தகவல் தொழில்நுட்ப மையம்(ஜேஐஐடி) செய்திருந்தது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குனர் டாக்டர் ராஜீவ் பாஹல் கூறியதாவது: கரோனா பரவல் ஏற்பட்ட சமயத்தில், எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல ஐ-ட்ரோன் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
வெப்ப நிலை பராமரிப்பு: இன்று குறைந்த வெப்ப நிலையை பராமரிக்கும் பெட்டியில் வைத்து 10 யூனிட் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளோம். இந்த பரிசோதனைக்குப்பின் வெப்பநிலை பராமரிப்போடு, எந்த பாதிப்பும் இல்லாமல் ரத்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.
அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக மற்றொரு ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இரண்டு விதமாக கொண்டு செல்லப்பட்ட ரத்த மாதிரிகளில் எந்த வேறுபாடும் இல்லையென்றால், இந்த ஐ-ட்ரோனை ரத்தம் கொண்டு செல்ல நாடு முழுவதும் பயன்படுத்த முடியும். இவ்வாறு டாக்டர் ராஜீவ் பாஹல் கூறினார்.
நேரம் குறையும்: ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா கூறுகையில், ‘‘ தொலைதூர பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ரத்தத்தை சரியான நேரத்தில் விநியோகிப்பதில் பல சவால்கள் உள்ளன. ட்ரோன் மூலம் ரத்தத்தை விநியோகிப்பது, போக்குவரத்து நேரத்தை வெகுவாக குறைக்கும்’’ என்றார்.
ஜேஐஐடி.யின் உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் பம்மி கவுபா கூறுகையில், ‘‘இந்த பரிசோதனை ஐசிஎம்ஆர், எல்எச்எம்சி, ஜிம்ஸ், ஜேஐஐடி ஆகியவை இணைந்து மேற்கொண்ட சாதனை’’ என்றார்.
-th