ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் தான். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக எழுந்த ஊழல் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார்கள் ஒவ்வொன்றையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மிக சிறப்பாகவே செயல்பட்டனர்.
பா.ஜனதா அரசை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அந்த தலைவர்கள் நழுவ விடவில்லை. கடந்த ஓராண்டாகவே பா.ஜனதா அரசுக்கு எதிராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளிவந்தபடியே இருந்தது.
இப்படி தொடர்ந்து பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. இவற்றை சரியான முறையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் அறுவடை செய்தனர் என்றே சொல்லலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
மீதமுள்ள தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்தனர். அதில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.
அதன் பிறகு கர்நாடக காங்கிரசுக்கு யாரை கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதை சித்தராமையா எதிர்த்தார். தான் முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் தடையாக இருப்பார் என்று அவர் கருதினார்.
ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பையும் மீறி கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கியது. அதன் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டங்களில் கூறினர். அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் இரு தரப்புக்கும் கட்டளையிட்டது. அதன் பிறகு முதல்-மந்திரி பதவி குறித்து பேசுவதை இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர்.
-mm